ஸ்வீடன் பயணத்திற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
நெதர்லாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டிற்கு புறப்பட்டார். அவரை நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.
பிரதமர் மோடி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற அவர், பின்னர் ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் தனது பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தற்போது ஸ்வீடன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
ஷிபோல் விமான நிலையத்தில் அவரை நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் நேரில் வந்து வழியனுப்பி வைத்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றிகரமான நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஸ்வீடன் புறப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியா – நெதர்லாந்து உறவுகளின் நெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் ராப் ஜெட்டன் விமான நிலையத்தில் வந்து மோடியை வழியனுப்பி வைத்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த பயணத்தின் போது இந்தியா – நெதர்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஸ்வீடன் பிரதமருடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவதுடன், முன்னணி தொழில்துறை தலைவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
