வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து கரீபியன் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகருக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகின. இந்த நிலநடுக்கங்கள் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்ததுடன், 700 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பேரிடர் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
