சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் குறித்து, “அவர் அடிக்கடி கருத்தை மாற்றி பேசுகிறார்; நம்பிக்கைக்குரியவராக தெரியவில்லை” என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. தலைவர் விஜயை இணைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக நேரடியாகவும், தனது மகன் ஜெய் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் உள்ளிட்டோரின் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அட்லீ வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும், “ஜனநாயகன்” திரைப்படம் தொடர்பாகவும் விஜய் மும்பைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின. அந்த பயணத்தின் போது, அவர் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அந்த சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து தமிழக பாஜ நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்த பீயூஷ் கோயல், “மும்பையில் விஜயுடன் பேச்சு நடத்தி, கூட்டணியில் வழங்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து தெரிவித்தோம்” என்றார்.
“அதற்குப் பதிலாக, அவர் அதிக தொகுதிகள் குறித்து பேசவோ, கூட்டணியில் சேர்வது குறித்து தெளிவாக பதில் அளிக்கவோ இல்லை. தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றி பேசினார். மேலும், அவர் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி கூறுகிறார்” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், “விஜய் நம்பிக்கைக்குரியவராக தெரியவில்லை. அவர் கூட்டணியில் சேர்ந்தாலோ இல்லையோ, தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகவே உள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
