சென்னை: “முதல்வர் விஜயிடம் ரூ.50 கோடி பெற்றதாக என் மீது திமுக ஆதரவாளர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இது முற்றிலும் பொய்யான அவதூறு” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக பாஜக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் திமுக அரசையோ முதலமைச்சர் ஸ்டாலினையோ விமர்சிக்கவில்லை என்றும் கூறினார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியதாகவும், அது உண்மையாக இருந்தால் அதைவிட பெரிய அரசியல் மோசடி எதுவும் இருக்க முடியாது என்றும் வைகோ விமர்சித்தார்.
மேலும், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினரைப் பற்றியும் பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், விஜயிடம் ரூ.50 கோடி பெற்றதாகவும், தனது மகனுடன் சேர்ந்து பெரும் சொத்துகளை குவித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றார்.
ஓஎம்ஆரில் 114 குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தை வாங்கியதாக வெளியான தகவலும் பொய்யானது என்றும், அங்கு ஒரு குடியிருப்பு மட்டுமே வாங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும், தனது சொத்துக்கள் அனைத்தும் சட்டபூர்வமானவை என்றும், பல பூர்வீக சொத்துகளை விற்ற விவரங்களும் பொதுமக்கள் அறிந்தவையே என்றும் தெரிவித்தார்.
தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும், எந்த ஆதாரமும் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவோர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் வைகோ எச்சரித்தார்.
அதேநேரத்தில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம் என்றும், உள்ளாட்சி தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வகையில் மதிமுக நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வைகோ அறிவித்தார்.
