வளைகுடா நாடுகளின் மீது நடைபெறும் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்; தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகளின் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்துவது தங்களின் உடனடி முன்னுரிமை.
பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் சவுதி அரேபியா கவனம் செலுத்துகிறது; தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளை முழுமையாக பயன்படுத்துவோம் என தெரிவித்தார்.
வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால், ராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும், ஈரானுடன் இருந்த நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும் கூறினார்.
ஈரானின் மிரட்டல்களை அச்சமின்றி எதிர்கொள்வோம்; தங்கள் தவறான கணிப்புகளை ஈரான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இத்தகைய தாக்குதல்கள் எந்த பயனையும் அளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை சவுதி அரேபியாவுக்கு உள்ளது; தன்னைக் காக்கும் திறனும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அதன் சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச அளவில் கூட்டு நடவடிக்கை அவசியம் எனவும் கூறினார்.
இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால் ஈரானின் எரிவாயு கிடங்குகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
