திருவனந்தபுரம்: கேரளாவில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன் விடுத்த சவாலை, முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சதீஷன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையைப் போல கூட, கடந்த 10 ஆண்டுகளில் இடதுசாரி அரசு வீடுகள் கட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், மாநில வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சவாலுக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இடதுசாரி அரசின் செயல்பாடுகள் ‘ஏ பிளஸ்’ தரத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், அரசின் சாதனைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்க எதிர்க்கட்சியினர் தயாரா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சதீஷன், முதல்வர் குறிப்பிடும் நேரம் மற்றும் இடத்தில் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
