“வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை”: லண்டனில் மோகன் பாகவத் பேச்சு
லண்டன்: வருங்கால சந்ததியினர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், இந்தியா முன்னேறும்போது அது போர்களைத் தொடங்காமல் அமைதியை உருவாக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற கலாசாரம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்று பேசினார்.
“வருங்கால தலைமுறையினர் உலகை சிறந்த இடமாக மாற்றுவார்கள்”
மோகன் பாகவத் பேசுகையில், பன்முகத்தன்மையும் ஒற்றுமையும் இணைந்து உலகளாவிய மோதல்களுக்கு தீர்வு காண உதவும் என்றார்.
வருங்கால சந்ததியினர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், அவர்கள் உலகை சிறந்த இடமாக மாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தால், அதை அடைவதற்கான வழியை அவர்களே கண்டுபிடிப்பார்கள் என்றும், பிரிவினைகளை கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“பாரதம் அமைதியை உருவாக்கும்”
இந்தியா முன்னேறும்போது எந்த சர்வாதிகாரியையும் உருவாக்காது என்றும், போர்களை தொடங்காமல் அமைதியை உருவாக்கும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
தீவிர வெறுப்புதான் ஆர்எஸ்எஸ் பணியின் அடிப்படை என்று சிலர் கூறுவதை கேட்டுள்ளதாகவும், அது முற்றிலும் தவறான கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஹிந்து என்பவர் தனிநபராக மட்டும் இல்லாமல், குடும்பம், சமூகம், சமுதாயம் மற்றும் மனிதகுலத்துடன் இணைந்தவராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இயற்கையை பாதுகாக்கும் வளர்ச்சி
இயற்கையை நேசிப்பது ஹிந்துக்களின் சிந்தனையில் முக்கியமானது என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
“எனக்கு இது வேண்டும்; மற்றவருக்கு கிடைக்கக்கூடாது” என்ற போட்டி மனப்பான்மைக்கு பதிலாக, அனைவருக்கும் தேவையானவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மனிதர்கள் இயற்கையை வெல்ல வேண்டியதில்லை என்றும், நாமே இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல வேண்டும்”
வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றும், மனிதர்களின் முன்னேற்றம் இயற்கையின் முன்னேற்றத்திற்கும் உதவ வேண்டும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று முரண்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“வாழுங்கள், வாழ விடுங்கள்; மற்றவர்களையும் வாழ வையுங்கள்” என்ற சிந்தனையை முன்னிறுத்திய அவர், பன்முகத்தன்மை இயற்கையானது என்பதால் அதை ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
