“லஞ்சப்பணத்தில் ஸ்டாலின், உதயநிதி பலன் பெற்றனர்”: சட்டசபையில் முதல்வர் விஜய் குற்றச்சாட்டு
சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பலன் பெற்றதாகவும் முதல்வர் விஜய் சட்டசபையில் குற்றம்சாட்டியுள்ளார்.
அமலாக்கத்துறை அறிக்கையில் திமுக ஆட்சியில் இருந்தபோது 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி பெறப்பட்டதாகவும், அதன் பயனாளர்களாக அப்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.
“சட்டசபையில் சாம்பிள் பார்ப்போம்”
சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், கடந்த வாரம் தனது மேசையில் 3 துறைகளின் கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பதாகவும் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார்.
எதிர்க்கட்சியினர் சவால் விடுத்த நிலையில், அந்த கோப்புகளை திறப்பதற்கு முன் தற்போது ஒரு சிறிய “சாம்பிள்” பார்ப்போம் எனக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
டெண்டர், கட்சி நிதி குறித்து குற்றச்சாட்டு
1970-களில் திமுக ஆட்சியில் இருந்தபோது வீராணம் திட்டத்துக்கான டெண்டரில் 2.5 சதவீதம் கமிஷன் கேட்கப்பட்டதாக சத்யநாராயண பிரதர்ஸ் தொடர்பான விவகாரத்தை விஜய் குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும், பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கட்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட தொகைகளில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி பலன் பெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.
“விஞ்ஞான ஊழல்” என விமர்சனம்
திமுக ஆட்சியில் தவறுகளை முறையாக செய்வதற்கான வகையில் “விஞ்ஞான ஊழல்” நடைபெற்றதாக விஜய் விமர்சித்தார்.
மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “கரூர் கேங்” எனக் குறிப்பிட்டு, அதன் தலைவர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும் விஜய் கூறினார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து திமுகவுக்கு பதிலடி
திமுக ஆட்சியில் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் கூட தாமதம் செய்யப்பட்டதாக முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார்.
பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பெண் காவல் ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படும் திமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடலூர் திமுக எம்.பி., ரமேஷின் ஆலையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விஜய் குறிப்பிட்டார்.
“கண்ணாடியை பார்த்துக் கொள்ளுங்கள்”
தவெகவினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
ஆனால், திமுக ஆட்சியில் திமுகவினரின் அனுமதியை பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அவர் விமர்சித்தார். குற்றங்களில் தொடர்புடைய பலர் திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
சட்டம்-ஒழுங்கு சீரழிவு குறித்து பேசுவதற்கு முன் திமுகவினர் “கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும்” என விஜய் கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் நடைபெற்றதாக தாம் கூறும் தவறுகளை மக்கள் மறக்கவில்லை என்றும், தமிழக மக்களின் நினைவாற்றல் வலிமையானது என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
