ராணுவ நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி: பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியவர் கைது
பதன்கோட்: இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அந்த தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உளவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் ஒரு பெரிய உளவு நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுஜன்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்திருந்த ஒரு கடையில் பல்ஜித் சிங் சிசிடிவி கேமரா பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கேமரா மூலம் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நேரடி காட்சிகளை பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு அனுப்பியதாக மூத்த போலீஸ் அதிகாரி Taljinder Singh Dhillon தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி மாதம் இந்த சிசிடிவி அமைப்பை பொருத்தியதை பல்ஜித் சிங் ஒப்புக்கொண்டதாகவும், துபாயைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து இதற்காக ரூ.40 ஆயிரம் பெற்றதாகவும் போலீசார் கூறினர்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு சிசிடிவி கேமரா மற்றும் வைபை ரூட்டர் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், விக்ரம்ஜித் சிங், பல்விந்தர் சிங் மற்றும் தரன்பிரீத் சிங் ஆகியோர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதமும் பஞ்சாப் போலீசார், பாகிஸ்தான் ஐஎஸ்.ஐ ஆதரவுடன் இயங்கிய இரண்டு உளவு குழுக்களை கண்டுபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
