ராகுலின் உண்மையான நோக்கம் என்ன? பாஜக தலைவர் நிதின் நபின் கேள்வி
ரோதக்: எஸ்ஐஆர் விவகாரத்தில் காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்திற்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஹரியானாவின் ரோதக் பகுதியில் பாஜக தலைவர் நிதின் நபின் பேரணி நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக, காங்கிரஸ் ஜனநாயக அமைப்புகளைத் தாக்கி வருகிறது. வாரிசு அரசியலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே, அரசியலமைப்பைப் பாதுகாப்பவர்கள் போல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். அதே நேரத்தில், அரசியலமைப்பு நெறிமுறைகளைச் சீர்குலைத்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு உண்மையிலேயே பலம் இருந்தால், முதலில் தங்கள் கட்சியில் நிலவும் ராகுல் காந்தியின் வாரிசு அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டியிருப்பார்கள். காங்கிரஸ் கட்சியில் ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்திற்கே இடமுள்ளது. ராகுல் காந்தி அல்லது அவரது குடும்பத்தினரின் உத்தரவுகளே இறுதியானவை என்ற அடிப்படையில் அக்கட்சித் தலைவர்கள் செயல்படுகின்றனர்.
நாட்டின் சட்டங்கள் ராகுல் காந்தியின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் நம்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசியலமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்திச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கட்சிக்குள் அதன் அடிப்படைக் கொள்கைகளையே சிதைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
140 கோடி மக்களிடம் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியானால், 3 கோடி ஊடுருவல்காரர்களையா நம்புகிறீர்கள்? ராகுல் காந்தியின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். ஜனநாயகத்திற்கு ஏன் சவால் விடுக்கிறீர்கள்? ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே முக்கியமானது. தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நிதின் நபின் பேசினார்.
