கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் அராஜகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை வெளியிட்டு அவர் பேசியார்.
அப்போது, மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் நுழைந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக லஞ்சம், ரவுடிகள் அட்டகாசம் போன்ற பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடு தற்போது வெளிப்படையாக தெரிய வந்துள்ளதாக கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜக நல்ல பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல நிர்வாகத்தை வழங்குவோம் என்றும் உறுதியளித்தார்.
இந்த தேர்தல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மாநில மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆவணம் பாஜக சார்ந்ததாக நிராகரிக்கப்படலாம் என்றாலும், இது மக்களின் உண்மையான கவலைகளை பிரதிபலிப்பதாக அமித்ஷா குறிப்பிட்டார்.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி தொண்டர்கள் மக்களை துன்புறுத்துகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
