வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த மந்திகிருஷ்ணாபுரத்தில் சர்ச் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த கட்டுமானப் பகுதி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுமான பகுதி தற்காலிகமாக மூடல்
இதுகுறித்து வேலூர் கலெக்டர் லீலா அலெக்ஸ் கூறுகையில், விபத்து நடந்த கட்டுமான பகுதி, அங்கு மேற்கொள்ளப்பட்ட இடிப்பு பணிகளால் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் அந்தப் பகுதிக்குள் செல்லாத வகையில், இடம் தற்காலிகமாக பூட்டப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த இடத்திற்கு முழுமையாக சீல் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கட்டட அனுமதி ஆவணங்கள் இல்லை
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சர்ச் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களது தரப்பில் கட்டடம் கட்டுவதற்கான அரசு அனுமதி தொடர்பான எந்த ஆவணங்களும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்திடமும் அதற்கான பதிவுகள் இல்லை என்றும் கலெக்டர் லீலா அலெக்ஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு
விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை நேற்று வழங்கப்பட்டதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
இதனிடையே, கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
