மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 12 நிபந்தனைகள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்.17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு 12 நிபந்தனைகளுடன் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
செப்.17ல் கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்.17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக கோவில் பரிவார மூர்த்திகளுக்கு செப்.16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான பூஜைகள் செப்.6 முதல் தொடங்க உள்ளன. கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி கோவில் நிர்வாகம் சார்பில் அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதை ஏற்று, அறநிலையத்துறை சார்பில் 12 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை வசூலிக்கக்கூடாது
கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடம் தனியாக நன்கொடை வசூலிக்கக்கூடாது என்றும், கோவில் நிதியை இதற்காக செலவிடக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக பணிகளை உபயமாக செய்து கொள்ளலாம் என்றும், இதனை காரணமாகக் கொண்டு உபயதாரர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் வழங்கக்கூடாது என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
யாகசாலை, பந்தல் அமைப்பில் கட்டுப்பாடு
கும்பாபிஷேகத்தையொட்டி அமைக்கப்படும் யாகசாலை, பந்தல் உள்ளிட்ட கட்டமைப்புகள் தகர கூரையுடன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மின் இணைப்புகள், பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய சான்றிதழ்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
கும்பாபிஷேகத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் பக்தர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சாரம், விமானத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கும்பாபிஷேக நிகழ்வின்போது சாரத்தின் மீதும், கோவில் விமானத்தின் மீதும் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு அறநிலையத்துறை கமிஷனர் வினய் 12 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
