கோவை:
மத்திய மின் துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் ஏற்பட்ட மின் தடையை நினைவுகூர்ந்து, அதுகுறித்து தனது மனைவி எழுப்பிய கேள்வியை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பகிர்ந்தார்.
கோவையில் தொழில் மற்றும் வர்த்தக துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி கோவையை தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மையமாக குறிப்பிடுவார். புதுமையான யோசனைகள் மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் திறன் இங்கு அதிகம் காணப்படுகிறது. கோவையில் சுமார் 15 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, நாட்டின் வளர்ச்சிக்கான உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். ஜவுளித்துறையில் ஆலோசனைகள் தேவைப்படும் போது திருப்பூர் முக்கிய மையமாக இருந்து வருகிறது.
2014ஆம் ஆண்டு மின் துறை அமைச்சராக பதவியேற்ற நாளில், டில்லி மற்றும் வட மாநிலங்களில் கடுமையான மின் தடை ஏற்பட்டது. அதுகுறித்து ஊடகங்களில் விமர்சனங்களும் வெளியாகின.
அன்றிரவு, நாள் முழுவதும் பணிச்சுமையால் உறங்கச் சென்றபோது, “மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்போது நீங்கள் எப்படி தூங்க முடியும்?” என்று என் மனைவி கேள்வி எழுப்பினார். பின்னர் என்னை எழுப்பி, மின் விநியோகத்தை சரிசெய்ய நேரில் சென்று பார்ப்பதற்கு அனுப்பினார்.
இந்த அணுகுமுறையே பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் மத்திய அரசின் செயல்முறை என அவர் குறிப்பிட்டார்.
அப்போது, வட மாநிலங்களில் மின் விநியோக கிரிட் செயலிழந்த நிலையில் இருந்தது. பிரதமர் மோடி, அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் சுமார் ₹2 லட்சம் கோடி செலவில், 3½ ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே மின் கிரிட் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் பல மாநிலங்களில் மின் துண்டிப்பு குறைந்து, 24 மணி நேர மின் விநியோகம் வழங்கப்படுகின்றது.
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் மின்சார பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு மத்திய அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளே காரணம் என பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
