மத்திய அமைச்சரவை மாற்றம்? மே 21ல் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய கூட்டம்
புதுடில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் மற்றும் மாற்றம் நடைபெறலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், மே 21ஆம் தேதி முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு திட்டங்களின் செயலாக்கம், மேற்காசிய பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அசாம் மற்றும் புதுச்சேரியிலும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜ தோல்வியை சந்தித்தது. அதேபோல், கேரளாவில் சில இடங்களில் வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனிடையே, தமிழக பாஜ முன்னாள் தலைவரான கே. அண்ணாமலை ஆந்திர மாநிலத்தின் மூலம் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதற்கான பாராட்டாக, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
