சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் சமீபத்தில் மூடப்பட்ட கடைகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய மனுவுக்கு, “கோப்பு நிலுவையில் உள்ளது; எனவே தகவல் வழங்க இயலாது” என்று டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் 4,765 சில்லரை மதுக்கடைகள் மூலம் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூடுமாறு கடந்த மாதம் 12ஆம் தேதி முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளின் சரியான எண்ணிக்கை மற்றும் மூடப்பட்ட கடைகளின் விவரங்களை வழங்குமாறு சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த காசிமாயன் என்பவர், மே 19ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மனு அளித்தார்.
இந்த மனுவுக்கு ஜூன் 5ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதிலில், “கோப்பு நிலுவையில் உள்ளதால் தகவல் வழங்க இயலாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த பதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்காததாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
