தமிழக சட்டசபையில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்து உரையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin பல்வேறு அரசியல் மற்றும் சமூக கருத்துகளை பதிவு செய்தார்.
அப்போது, புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட JCD Prabhakar மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரவிசங்கருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
சபாநாயகர் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர் என்றும், சட்டசபை மரபுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நல்ல அனுபவம் கொண்டவர் என்றும் உதயநிதி குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக இந்த சட்டசபையில் வெறும் எதிர்க்கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று கூறினார்.
தமிழக சட்டசபை இந்தியாவின் முன்னோடி சபைகளில் ஒன்று என்றும், தமிழகம் இன்று பண்பாட்டு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பதற்கு சட்டசபையில் நடைபெற்ற விவாதங்கள், நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபட்ட வரிசைகளில் அமர்ந்திருந்தாலும், தமிழக வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் உதயநிதி தெரிவித்தார்.
முதல்வர் Vijay அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது அரசியல் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு என்றும், அந்த பண்பு சட்டசபையிலும் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “திமுக அரசின் கடந்த ஆட்சிக்காலத்தில் ‘இது கழக அரசு அல்ல, நமது அரசு’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டோம். அதேபோல், புதிய அரசும் அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சட்டசபையில் புதிய எம்எல்ஏக்கள் மற்றும் அதிகளவிலான பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக விமர்சித்த உதயநிதி, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முக்கிய இடத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறுதியாக, “மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
