சென்னை: போதையில்லா தமிழகத்தை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அவர் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மாநாட்டில் பேசிய முதல்வர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், அரசியல் சார்பின்றி பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் அரசாக செயல்பட்டு, அனைத்து அரசு திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு போன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், தனது கட்சியினர் உட்பட எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி காவல்துறையினர் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக செயல்படலாம் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
