சென்னை: பெரும்பான்மை ஆதாரங்களுடன் வரும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆட்சியமைக்க உரிமை உள்ளது என தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், “தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க அழைக்க முடியாது. யார் யார் ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்கான விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “கவர்னர் மாளிகைக்கு 118 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வந்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்க்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை வென்றுள்ள அதிமுக மற்றும் திமுக இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கவர்னர், “பெரும்பான்மைக்கான ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன்” என்றார்.
மேலும், “அவர்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் போதுமானது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பேன்” என்றும் கவர்னர் தெரிவித்தார்.
