புதுடில்லி: மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சர்வதேச எண்ணெய் சந்தை மாற்றங்களின் பின்னணியில், எண்ணெய் நிறுவனங்களின் நிதிசுமையை குறைக்கும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பிறகு, இரு தரப்புகளுக்கிடையே மோதல் தீவிரமடைந்தது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் நிதிசுமையை சந்தித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையை சமாளிக்க, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசலுக்கான கலால் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு நடவடிக்கை எண்ணெய் நிறுவனங்களுக்கு நிவாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றம் பொதுமக்களுக்கு நேரடியாக விலை குறைப்பாக பிரதிபலிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
