புட்டபர்த்தி அருகே வரலாற்றுச் சாதனை: 24 மணிநேரத்தில் 29 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை
புட்டபர்த்தி: பெங்களூரு – விஜயவாடா இடையே கடப்பா வழியாக அமைக்கப்பட்டு வரும் என்.எச்.544ஜி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில், 24 மணி நேரத்தில் 28.95 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டதன் மூலம், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை, பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 624 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடம், ஆந்திராவில் எட்டு மாவட்டங்களையும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களையும் இணைக்கிறது. ரூ.19,320 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலை, ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கொடிகொண்டாவில் தொடங்கி, பெங்களூரில் முடிவடைகிறது.
மண் நிரப்புதல், சாலை அமைப்பு, பாலங்கள், வடிகால் வசதிகள் உள்ளிட்ட பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இந்த திட்டத்தில், புட்டபர்த்தி அருகேயுள்ள வானவோலு – ஓடுலப்பள்ளி பிரிவில் நடைபெறும் பணிகளை ராஜ்பாத் இன்ப்ராகான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம், ஒரே நாளில் 10,675 மெட்ரிக் டன் பிட்மினஸ் கான்கிரீட்டை தொடர்ச்சியாக பயன்படுத்தி, 28.95 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பிட்மினஸ் சாலை அமைப்பில் உலக அளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த சாதனையை தேசிய அளவிலான பெருமை என குறிப்பிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இது மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையையும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
வரும் 12ம் தேதி புட்டபர்த்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
