புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணையை வாங்க வியட்நாம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இந்தோனேஷியாவும் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை செயலர் Rajesh Kumar Singh தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பான BrahMos Missile உலகின் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நிலம், கடல் மற்றும் வான்படை தளங்களில் இருந்து ஏவக்கூடிய திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டது.
மேலும், ஒரே நேரத்தில் பல இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளதால், உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே Philippines நாடு பிரமோஸ் ஏவுகணை வாங்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாம் பிரமோஸ் ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், Indonesia நாடும் பிரமோஸ் ஏவுகணையை வாங்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இருப்பதாக அவர் கூறினார்.
“எனக்குத் தெரிந்தவரை வியட்நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் நம்பகமான கூட்டாளி நாடுகளுடன் மட்டுமே பகிரப்படுகின்றன. ஆசியான் நாடுகளை இந்தியா நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக பார்க்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
இதனுடன், பிரமோஸ் ஏவுகணையுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் ஆதரவு சாதனங்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
