புதுடில்லி: வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி அல்லது சிறப்பு செஸ் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பிரதமர் மோடி மறுத்துள்ளார்.
அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துங்கள். ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்கலாம்” என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் செஸ் விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இதில் ஒரு துளியும் உண்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வெளிநாட்டு பயணங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை. வணிகம் செய்வதை எளிதாக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எங்கள் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
