இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பிரதமர் Narendra Modi தமக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறி, கூடுதல் 12.5 சதவீத சுங்க வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதித்து வந்ததாகவும், தற்போது நிலைமை மாறி இரு நாடுகளும் இணைந்து பொருளாதார ரீதியாக பலன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக கூறிய அவர், விரைவில் இரு நாடுகளும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் தனது நல்ல நண்பர் என்றும் டிரம்ப் கூறினார். இரு தலைவர்களுக்கும் இடையே நல்ல புரிதல் மற்றும் உறவு நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஈரான் தொடர்பாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். ஈரானின் ராணுவ திறன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படை திறன்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
