செஷல்ஸ் நாட்டின் புதிய உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மனி வழங்கினார். இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள தொடர் முயற்சிகள், சிறிய தீவு நாடுகளின் நலன்களை முன்னிறுத்தும் அவரது பங்களிப்பு ஆகியவற்றை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவரும் பிரதமர் மோடியே ஆவார்.
சமீபத்தில் செஷல்ஸ் அரசு தனது தேசிய விருதுகள் தொடர்பான அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, முந்தைய அனைத்து தேசிய விருதுகளும் ரத்து செய்யப்பட்டு, புதிய உயரிய கவுரவமாக ‘கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக, செஷல்ஸ் அதிபர்கள் தானாகவே உயரிய விருதுக்கு தகுதி பெறும் நடைமுறை இருந்தது. ஆனால், அந்த நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து பழைய விருது முறை நீக்கப்பட்டு, புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது
