மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: பாதிரியார் கைது
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், பாதிரியார் ஜெயராஜ், 56, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமயபுரம் பள்ளிவிடை பகுதியில் உள்ள புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், ஜெயராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.
மாணவி அளித்த புகார்
சம்பவத்தன்று 7-ம் வகுப்பு மாணவி, ஜெயராஜின் அறைக்கு சென்றதாகவும், அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவி அங்கிருந்து வெளியேற முயன்றபோது, சம்பவம் குறித்து வெளியில் தெரிவிக்கக்கூடாது என ஜெயராஜ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பள்ளியில் பெற்றோர், பொதுமக்கள் திரண்டனர்
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அறிந்ததை தொடர்ந்து, பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், ஜெயராஜ் பள்ளியின் பின்வாசல் வழியாக அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று மேலும் சில மாணவிகளுக்கும் அவர் தொல்லை அளித்ததாக புகார்கள் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
போக்சோவில் கைது
இதனைத் தொடர்ந்து போலீசார் ஜெயராஜை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளிடம் இருந்து மேலும் புகார்கள் வந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
