மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படாமல், அந்தத் துறையை முதல்வர் விஜய் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
முன்னதாக இருந்த பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், புதிய செயலர், மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் நகரமைப்பு திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர் விஜய், அதிகாரிகளிடம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
அதில், “அனைத்து அதிகாரிகளும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், துறைச் செயலர் வாயிலாக நேரடியாக எனக்கு தெரிவிக்கலாம்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், “அமைச்சர்கள் அல்லது ஆளும் கட்சியினருக்காக விதிமுறைகளை மீறி செயல்பட வேண்டாம். விதிகளை மீறி அதிகாரிகள் தவறு செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், “நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் முறைகேடுகளில் ஈடுபடக்கூடியவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரைவில் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது” என்றனர்.
