“நான் ஓய்வில் இருக்கிறேன்; நீங்கள் இருப்பதால் நாட்டைப் பற்றி கவலையில்லை” – மோடியிடம் சரத் பவார் பேச்சு!
புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், 85, இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 4ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக சரத் பவாரைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, அவர் போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சரத் பவார், ”நான் ஓய்வில் இருக்கிறேன்; நீங்கள் இருப்பதால் நாட்டைப் பற்றி கவலையில்லை” எனத் தெரிவித்தார்.
தொலைபேசி உரையாடல் குறித்து உதவியாளர் விளக்கம்
இந்த உரையாடல் குறித்து சரத் பவாரின் உதவியாளர் வித்தல் மணியார் கூறியதாவது:
பிரதமர் மோடி தொலைபேசியில் சரத் பவாரைத் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தார். மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பேசிய பிரதமர், அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது, சுப்ரியா சுலே தற்போது தயாராகிவிட்டார் என்றும், சுப்ரியாவும் மற்றவர்களும் இணைந்து நாட்டைப் பார்த்துக்கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தனது உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த பிரதமருக்கு சரத் பவார் நன்றி தெரிவித்தார். மேலும், ”நான் ஓய்வில் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் இருப்பதால் நாட்டைப் பற்றி கவலையில்லை. உங்களுடைய நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்” எனக் கூறியதாக வித்தல் மணியார் தெரிவித்தார்.
இவ்வாறு சரத் பவாரின் உதவியாளர் வித்தல் மணியார் கூறினார்.
