புதுடில்லி: “தேஜ கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாகக் கருதுகின்றனர்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாஜ பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, தேர்தலுக்கு தயாராகும் விதமும், பூத் கமிட்டி உறுப்பினர்களின் பொறுப்புகளும் குறித்து பிரதமர் விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: “தேஜ கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாகப் பார்க்கின்றனர். ஒரு காலத்தில் திமுக மத்திய அரசில் அங்கமாக இருந்தபோதும், தமிழகத்திற்கு குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், மத்தியத்தில் பாஜ அரசு அமைந்த பிறகு தான் ரயில்வே, சாலை மேம்பாடு போன்ற பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பாஜ ஆட்சி அமைந்த பிறகு தான் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முன்பு எப்படி இருந்தது, தற்போது பாஜ ஆட்சியில் அது எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதையும் மக்கள் உணரலாம்,” என்று கூறினார்.
கவலை:
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருடன் உரையாடியபோது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து கவலைகள் இருப்பதாக மோடி தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் சட்டவிரோத செயல்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக இருப்பது கவலைக்குரியது. பாஜ நிர்வாகிகள் சிறிய அளவிலான கூட்டங்களை நடத்தி, முதல்முறை வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
