மும்பை: துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பாதுகாப்பாக மும்பை வந்து சேர்ந்தனர்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான், அந்த பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலைமையால் மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவைகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர்.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக துபாயில் கடந்த 3 நாட்களாக சிக்கியிருந்த இந்தியர்களில் ஒரு குழுவினர் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய விசாகா என்ற பெண்மணி, துபாயில் இருந்தபோது மிகவும் பயமாக இருந்ததாகவும், தற்போது தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தங்களுடன் துபாயில் மொத்தம் 580 இந்தியர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் வெவ்வேறு விமானங்கள் மூலம் படிப்படியாக தாயகம் திரும்பி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
