திருநெல்வேலி: தீயணைப்பு துறையில் போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், கடந்த 2025 நவம்பர் 17ஆம் தேதி இரவு ரூ.2.5 லட்சம் பணம் மர்மமாக வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, சரவணபாபு மற்றும் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இந்த சம்பவம் தீயணைப்பு துறை அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சரவணபாபு அளித்த புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடையதாக கூறப்படும் திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜ் தற்போது தலைமறைவாக உள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரி செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி முன்னிலையில், சரவணபாபு கன்னியாகுமரியில் பணியாற்றிய காலத்தில் போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து அவரை இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2019-2020 காலகட்டத்தில் கன்னியாகுமரியில் வழங்கப்பட்ட இரண்டு போலி சான்றிதழ்கள் உட்பட, தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறை உயரதிகாரிகள் வழங்கியதாக கூறப்படும் போலி சான்றிதழ்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
