பழநி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வந்த அமைச்சர் ரமேஷ், கொடைக்கானல் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவாயில் மற்றும் கிரிவீதியில் உருவாக்கப்பட்ட ராக்கால நந்தவனத்தை பழநி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிமனோகரனுடன் இணைந்து திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்.எல்.ஏ. ரவிமனோகரனின் பெயரும் படமும் இடம்பெறாதது குறித்து அ.தி.மு.க.வினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் நேரில் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ரோப்கார் மூலம் மலையிலுள்ள பழநி முருகன் கோயிலுக்குச் சென்ற அமைச்சர், பொது தரிசன வழியில் பக்தர்களுடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அன்னதானக் கூடத்திற்குச் சென்று, பக்தர்களுடன் ஒரு மணி நேரம் காத்திருந்து அன்னதானம் அருந்தினார்.
அதன்பின் அடிவாரத்திற்கு திரும்பிய அவர், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கோயில் நிர்வாகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், பழநி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், அன்னதானத்தின் தரம் மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் கோயில் செயல்பாடுகள் வணிக நோக்கத்துடன் நடைபெற்றதாகவும், அதை மாற்றி பக்தர்களுக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த விவகாரத்தில் முடிவெடுப்பது முதல்வரின் பொறுப்பு என்றும், தாம் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக பொறுப்பை மட்டுமே கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
