தினமலர்’ பவள விழா: இன்று தபால் தலை வெளியீடு
சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று (செப்., 5) தபால் தலை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரையாற்றுகிறார்.
கடந்த 75 ஆண்டுகளாக செய்தித்தாளாக மட்டுமின்றி, மக்களின் நம்பிக்கையின் குரலாகவும் ‘தினமலர்’ நாளிதழ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
75 ஆண்டுகால அர்ப்பணிப்பு
அச்சமின்றி கருத்துகளை பதிவு செய்வது, கொள்கைகளில் உறுதியுடன் இருப்பது, உண்மையை உரைகல்லாக கொண்டு செயல்படுவது என நீண்ட பயணத்தை ‘தினமலர்’ தொடர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு நாளிதழின் பவள விழா கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி தபால் தலை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.
துணை ஜனாதிபதி பங்கேற்பு
விழா இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ‘தினமலர்’ பவள விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் தபால் தலையை வெளியிட்டு, சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் முன்னிலை வகிக்கிறார்.
‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றுகிறார். ‘தினமலர்’ வேலூர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி நன்றியுரை வழங்குகிறார்.
75 ஆண்டுகால பயணம் குறித்த சிறப்பு காணொளி
விழாவில், ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் பாரம்பரியம் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார்.
மேலும், ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் அதன் நிறுவனர் டிவி.ராமசுப்பையர் குறித்த சிறப்பு காணொளியும் விழாவில் ஒளிபரப்பப்பட உள்ளது.
