தமிழக தலைமை செயலகத்தில் ‘ஹிந்து சமய அறநிலையத்துறை’ என்ற பெயரில் புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கத்திலும் இந்த புதிய துறையை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையரகம் புதிய துறையின் கட்டுப்பாட்டில்
புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுவரை செயல்பட்டு வந்த அறநிலையத்துறை ஆணையரகம், இனி முழுமையாக இந்த புதிய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் தலைமை செயலகத்தில் அறநிலையத்துறை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு தனி துறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாக விதிகளில் திருத்தம்
புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசின் நிர்வாக விதிகள் மற்றும் தலைமை செயலக நடைமுறை விதிகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான திருத்தங்களை மனித வள மேலாண்மைத் துறை தனியாக வெளியிடும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாராமனுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராக உள்ள ராஜாராமன், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயலராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
