சென்னை: ஒரு நிலத்தில் தர்கா அமைந்துள்ளது என்பதற்காக மட்டுமே அந்த நிலம் வக்ப் சொத்தாக கருதப்பட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள சர்கார் சையத் ஹபீபுல்லா ஷா காதரி ஆரிப் ரப்பானி ஹசரத் தர்காவிற்கு முத்தவல்லி நியமித்து, அந்த தர்காவை வக்ப் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தமிழ்நாடு வக்ப் வாரியம் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, தர்கா நிர்வாகம் வக்ப் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த வக்ப் தீர்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, தர்கா நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி திலகவதி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலகவதி, வக்ப் வாரியம் எடுத்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், ஒரு சொத்தை வக்ப் சொத்தாக அறிவிப்பதற்கு முன் சட்டப்படி உரிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட சொத்து வக்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கோ அல்லது அரசிதழில் வெளியிடப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஒரு நிறுவனம் அல்லது சொத்து சட்டரீதியாக வக்ப் என அங்கீகரிக்கப்படாத நிலையில், அங்கு தர்கா இருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வக்ப் வாரியம் அதிகாரம் செலுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஒவ்வொரு கல்லறையோ அல்லது தர்காவோ தானாகவே வக்ப் சொத்தாக மாறாது என்றும், அதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
