தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை மற்றும் கணக்காய்வு அறிக்கையான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடர்பாக வெளியான இந்த அறிக்கையில், திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அனுமதி பெறாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம், கார்கள், டிவி வாங்க நிதி?
சிஏஜி அறிக்கையின்படி, அனுமதிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு பதிலாக சில நகரங்களில் மாநகராட்சி மின்சாரக் கட்டணம் செலுத்துதல், ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட செலவுகளுக்கு திட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சொகுசு கார்கள், கணினிகள் மற்றும் 110 இன்ச் எல்இடி தொலைக்காட்சிகள் வாங்குவதற்கும் ஸ்மார்ட் சிட்டி நிதி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,602.2 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை
2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 7 நகரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.1,602.2 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இந்த திட்டங்கள் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், திட்டமிடப்படாத ரூ.623.86 கோடி மதிப்பிலான 44 பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் அதிக திட்டமிடப்படாத பணிகள்
திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்ட நகரங்களில் திருநெல்வேலி முதலிடத்தில் இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
அங்கு ரூ.314.62 கோடி மதிப்பிலான 15 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற பணிகளில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பசுமைக் கட்டடம் அமைத்தல், கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளக்குகள் அமைத்தல், திருநெல்வேலியில் விருந்தினர் மாளிகை கட்டுதல் மற்றும் மதுரையில் கருத்தரங்கு மையம் அமைத்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ரூ.23.83 கோடி அனுமதியற்ற செலவு
கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவுகளுக்காக 6 நகரங்கள் மொத்தம் ரூ.23.83 கோடி ஸ்மார்ட் சிட்டி நிதியை பயன்படுத்தியதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு விளம்பரங்களுக்காக ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுடன் தொடர்பில்லாத பணிகளுக்காக ரூ.18.44 லட்சமும் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பூர், ஈரோடு, மதுரையில் நிதி பயன்படுத்திய விதம்
திருப்பூர் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் கருத்தரங்கு அறையை புதுப்பிக்கவும், 110 இன்ச் தொலைக்காட்சி, கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கவும் ஸ்மார்ட் சிட்டி நிதியை பயன்படுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, கழிவுநீர் அகற்றும் பணியாளர்களின் ஊதியத்தை வழங்குவதற்காக நிர்வாக மற்றும் அலுவலகச் செலவுகளுக்கான நிதியில் இருந்து ரூ.2.59 கோடியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி, பிற குடிமைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ.48.36 லட்சத்தை பயன்படுத்தியதாகவும் சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு வராத வணிக வளாகங்கள்
மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவழித்து கட்டப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலை இருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சில திட்டங்களில் லிப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்கள் தொடர்பாகவும் கேள்வி
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்படும் சிறப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.200 கோடி மூலதனத்துடன் இருக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், கம்பெனிகள் சட்டத்தின் கடுமையான விதிகளை தவிர்ப்பதற்காக, சில சிறப்பு நிறுவனங்கள் வெறும் ரூ.10 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதியை முறையாக கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நிறுவனங்களுக்கு பதிலாக மாநகராட்சிகளே டெண்டர்களை கோரியதாகவும், இதன் மூலம் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
