தமிழக சட்டசபையில் “கடவுள் அறிய” உறுதி கூறி பதவியேற்ற எம்எல்ஏக்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இன்று (மே 11) தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்வில் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப “உளமாற உறுதி கூறுகிறேன்” அல்லது “கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்” என்ற இரண்டு வாசகங்களில் ஒன்றை பயன்படுத்தி பதவியேற்றனர்.
அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் “கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்” என்ற வாசகத்துடன் பதவியேற்றது கவனம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
“கடவுள் அறிய உறுதி கூறி” பதவியேற்ற முக்கிய எம்எல்ஏக்களில் தவெகவைச் சேர்ந்த அருண் ராஜ் (திருச்செங்கோடு), செங்கோட்டையன் (கோபிச்செட்டிபாளையம்), வெங்கடரமணன் (மயிலாப்பூர்), நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்), ராஜ்மோகன் (எழும்பூர்), டி.கே. பிரபு (காரைக்குடி), அருள் விக்னேஷ் (கள்ளக்குறிச்சி), ஆனந்த் மோகன் (ஈரோடு), ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்), தென்றல்குமார் (கே.வி.குப்பம்), தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (விருதுநகர் கிழக்கு), செந்தில்குமார் (திருவொற்றியூர்), சிவக்குமார் (பெரம்பலூர்), சத்யா (கிருஷ்ணராயபுரம்), கீர்த்தனா (சிவகாசி), சரத்குமார் (தாம்பரம்) உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், நடராஜ், நல்லதம்பி, எஸ். பழனிசாமி, சேகர், இ.சி. கோவிந்தராசன், ரா. ராஜேந்திரன், ராமசந்திரன், மணி, மோகன், வெங்கடாச்சலம், ஜெயசங்கரன் மற்றும் ஹரி பாஸ்கர் உள்ளிட்டோர் “கடவுள் அறிய” உறுதி கூறி பதவியேற்றனர்.
மேலும், காங்கிரஸ் சார்பில் பிரவீன், பாமக சார்பில் சவுமியா அன்புமணி, தேமுதிக சார்பில் பிரேமலதா, பாஜக சார்பில் போஜராஜன் மற்றும் திமுக சார்பில் சுதாகர் ஆகியோரும் இந்த வகையில் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது.
