சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் Anbumani Ramadoss வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு நீர் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கர் என்ற உச்சத்தை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததாலும், கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளிலும் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும், தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்மேற்கு பருவமழை முன்னேற்றம் தடைபட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதி வரை கர்நாடக அணைகள் நிரம்பும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி நீர் திறக்கப்படாத நிலையில், சில பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கியிருந்தாலும், தடையற்ற மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் மட்டும் ரூ.2,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படக்கூடும் என்றும், லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசிடம் நிதி பெற்று விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குறுகிய கால பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டும் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் ரூ.5,000 இடுபொருள் மானியத்துடன் கூடிய குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 3 முதல் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
