தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், அவை தொடர்பான முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது குறித்து பேசிய சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரலையில் பார்த்த மக்கள், தொடர்ந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளையும் காண விரும்புவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, தற்போதைய ஆட்சியைத் தேர்ந்தெடுத்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அவைக்குள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை அறிய ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சட்டசபை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கான பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
