சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள திமுக முன்னாள் நிர்வாகி Jaffer Sadiq தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜாபர் சாதிக், முன்பு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்திருந்தது.
தற்போது ஜாமினில் உள்ள நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி அவரது தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் ஜே.எஸ்.எம். விடுதி உள்ளிட்ட மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நோக்கில் பணம் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
