சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விபரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதேபோல், த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச் செயலராக உள்ள ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது சொத்து மதிப்பு 115 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் 220 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அவர் அளித்துள்ள சொத்து விபரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்பது குறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும் என, பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி டெய்சிக்கு சொந்தமான சொத்துகள் குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
117 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்’ மற்றும் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘டாமினன்ட் டவர்ஸ் அண்டு டிரேடர்ஸ்’ நிறுவனங்களில் அவரது மனைவி இயக்குநராக இருப்பதற்கான விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டும், அது முறையாக பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஜி. தேவராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
