சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!
சென்னை: புழல் மற்றும் தேனி மாவட்ட சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அரசு வெளியிட்ட உத்தரவின்படி, சிறைத்துறை டிஜிபியாகப் பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர், டான்ஜெட்கோ ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு சிஐடியில் ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்த சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சஞ்சய் மாத்தூர் குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாகவும், சோனல் சந்திரா டிஜிபி அலுவலக ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரகுபதி கரூர் மாவட்ட எஸ்பியாகவும், ஸ்டாலின் தென்காசி மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அசோக் குமார் மதுரையில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புழல் மற்றும் தேனி சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்களைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
