சென்னை: கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியுடன் இருக்கும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சூலூரில் சமூக விரோதிகள் இருவரால் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்றார்.
அவருடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். குழந்தையை இழந்து துயரத்தில் இருந்த குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட தலைவர் ஹரிராமன், சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைதள பதிவில், “இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியுடன் இருக்கும் என்று குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
