டில்லி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரும் வழக்கில், தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. மத நம்பிக்கைகள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்றும் விளக்கம் அளித்தது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 48 நாள் பிரம்மச்சரிய விரதம் இருந்து, இருமுடி கட்டி செல்ல வேண்டும் என்பது வழிபாட்டு நியமமாக உள்ளது.
மேலும், 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தரிசிக்க அனுமதி என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறை பாலின சமத்துவத்துக்கும் மத சுதந்திரத்துக்கும் எதிரானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019ஆம் ஆண்டு, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.
இதன்படி, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் முன்வைத்த வாதத்தில்:
இந்தியாவில் ஒரே ஒரு மதம் மட்டுமல்ல; ஒவ்வொரு மதத்திற்கும் தனித்துவமான பண்புகள் உள்ளன. மத நம்பிக்கைகளை அறிவியல் அல்லது பகுத்தறிவு அடிப்படையில் ஆய்வு செய்யக் கூடாது.
அறிவியலால் விளக்க முடியாத ஒரு சக்தியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை.
ஆனால், நரபலி போன்ற சட்டவிரோத செயல்களை மத சடங்காக கூறி நீதிமன்றத்தை அணுகினால், அது ஏற்க முடியாது; நேரடியாக நிராகரிக்கலாம்.
சபரிமலை விவகாரம் மத நம்பிக்கையையும், குறிப்பிட்ட பிரிவினரின் தன்னாட்சி உரிமையையும் சார்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஒரு மசூதி அல்லது குருத்வாராவிற்கு செல்லும்போது தலையை மூடி செல்ல வேண்டும் என்பது ஒரு நடைமுறை. அதை தனிநபர் சுதந்திர மீறல் என கூற முடியாது.
அரசியல் சாசனத்தில் உள்ள “அறநெறி” என்ற சொல்லை விரிவுபடுத்தி “அரசியல் சாசன அறநெறி” என மாற்றுவது நீதித்துறை மீறலாகும்.
மத விஷயங்களில் நீதித்துறை தலையீடு சில நேரங்களில் ஆபத்தானதாக அமையும். ஏனெனில் மத சம்பந்தமான விஷயங்களில் நிபுணர்களின் கருத்தோ, புனித நூல்களோ நேரடியாக ஆய்வு செய்யப்படுவதில்லை. எனவே, மத நம்பிக்கைகள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
