கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்ததாக கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, 24 மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையின்போது போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து குதித்ததில் காயமடைந்து, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு குற்றச்சாட்டுக்குட்பட்ட மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் ஜாமீனில் வெளியே வருவதைத் தடுக்க குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்தது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையைத் தொடர்ந்து, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் Ramya Bharathi சிறப்பு அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தார்.
அதை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள், சிறையில் உள்ள மோகன்ராஜ் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கிடம் முறையாக வழங்கப்பட உள்ளன.
சிறுமி கொலை வழக்கில் விரைவாக குற்றவாளிகளை கைது செய்ததுடன், தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தையும் பயன்படுத்திய காவல்துறையின் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
