கோல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரமாண்ட சிலை, பாதுகாப்பு காரணங்களால் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கோல்கத்தா நகரில் உள்ள லேக் டவுன் பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த மே 25ஆம் தேதி அப்பகுதியில் பலத்த காற்று வீசியபோது, சிலை அசைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் பொறியாளர்கள் சிலையை ஆய்வு செய்தனர். ஆய்வில், சிலையின் கட்டமைப்பில் உறுதித்தன்மை குறைவாக இருப்பதும், அது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முதற்கட்டமாக சிலை கயிறுகளால் கட்டி பாதுகாக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிலையை முழுமையாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, பிரம்மாண்ட கிரேன்களின் உதவியுடன் மெஸ்ஸியின் சிலை கவனமாக அகற்றப்பட்டு அங்கிருந்து மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோல்கத்தா வந்திருந்த Lionel Messi, இந்த சிலையை நேரடியாக திறந்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிலையை பாதுகாப்பான இடத்தில் மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
