“கேடு கெட்ட கொளத்தூர் மக்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை
தூத்துக்குடி: “கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றியிருந்த ஸ்டாலினுக்கு அந்த தொகுதி மக்கள் வாக்களிக்கவில்லை” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட உடன்குடியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே நீடிக்கும். அதுவரை திமுக தான் இந்த ஆட்சியை தாங்கிக் கொண்டிருக்கிறது. நான்கு அல்லது ஆறு மாதங்களில் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவார்” என்று கூறினார்.
மேலும், “மீண்டும் லாட்டரி முறையை கொண்டு வர அமைச்சர் ஆதவ் முயற்சி செய்கிறார். தமிழகத்தில் லாட்டரி நுழைய இடம் கொடுக்கும் ஆட்கள் நாங்கள் அல்ல” என்றும் தெரிவித்தார்.
“தைரியம் இருந்தால் அமைச்சர் ஆதவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்” என்றும் சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்” என்றார்.
அதேபோல், “சென்னையின் கொளத்தூர் தொகுதியை ஸ்டாலின் சிங்கப்பூர் போல மாற்றியிருந்தார். ஆனால் அந்த தொகுதி மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை” என்று கூறியதோடு, சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
மேலும், “ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வந்திருந்தால் அனைத்து பெண்களுக்கும் ரூ.2,000 வழங்கியிருப்போம். பெண்களுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குவது எப்படி சாத்தியம்? அதற்காக பிரதமர் மோடியிடம் பேசி வாங்கப் போகிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
