கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை? டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை
புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க உள்ளதாக டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தொடர்ந்த வழக்கில் இருந்து கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி டில்லி விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், அந்த நீதிபதி ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்றும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக இருப்பதாகவும் கூறி, இந்த வழக்கை அவர் விசாரிக்கக்கூடாது என கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், கெஜ்ரிவால் முன்வைத்த சந்தேகங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று கூறிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, வழக்கிலிருந்து விலக மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நீதிபதி முன்பாக ஆஜராக மாட்டேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கடுமையான கருத்துகளை பதிவு செய்தார்.
“நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இந்த நீதிமன்றத்தை நோக்கி மறைமுக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் அதிகாரம் கொண்டவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் நீதித்துறையை அச்சுறுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டவை” என்று அவர் கூறினார்.
மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் குறித்து காணொளிகள் மூலம் அவதூறு பரப்பப்பட்டதாகவும், இது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல நீதித்துறையையே அச்சுறுத்தும் முயற்சி என்றும் குறிப்பிட்ட நீதிபதி, கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
