கர்கோவுன்: மஹா கும்பமேளா மூலம் பிரபலமான மோனாலிசா போஸ்லே 18 வயதிற்கு உட்பட்டவர் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரை திருமணம் செய்ததாகக் கூறப்படும் கணவர் பர்மான் கான் மீது மத்திய பிரதேச போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் உள்ளிட்ட பொருட்களை விற்று வந்த மோனாலிசா, தனது தோற்றம் மற்றும் தனித்துவத்தால் சமூக ஊடகங்களில் பிரபலமானார். பின்னர் விளம்பரங்கள் மற்றும் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தன.
கடந்த மாதம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, அங்குள்ள கோவிலில் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், மோனாலிசா 18 வயதை நிறைவு செய்யாதவர் என்பது தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் பதிவுகள் மூலம் தெரியவந்தது. அவர் 2009 டிசம்பர் 30 அன்று பிறந்தவர் என பதிவுகள் காட்டுகின்றன.
ஆனால், திருமணத்தின் போது 2008 ஜனவரி 1 பிறந்ததாக போலியான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்ததாகக் குற்றம்சாட்டி, பர்மான் கான் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பில், விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தம்பதியினர் கேரளாவின் கொச்சியில் வசித்து வருவதால், மத்திய பிரதேச போலீசார் கேரள போலீசாருடன் இணைந்து நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மோனாலிசாவுக்கு போலி சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தொடர்பு இருக்கலாம் என தேசிய பழங்குடியினர் ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.
