சென்னை: அமமுக கட்சி வரவிருக்கும் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என அதன் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
டில்லி பயணம் குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
பாமக தலைவர் அன்புமணியுடன் டில்லி செல்லும் நிலையில், அங்கு முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து அரசுக்கு தெளிவு இல்லையா என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் அதிருப்தி காரணமாக அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் அடுத்த சில நாட்களில் எடுக்கப்படும் என்றும், இதுவரை ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் ஊகங்கள் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இபிஎஸ் ஆகியோரிடம், அமமுகவுக்கு தேவையான தொகுதிகள் குறித்து விரைவில் கோரிக்கை விடுப்பேன் என்றும் தினகரன் கூறினார்.
